இலங்கையில் இயற்கையின் சீற்றம்; ஸ்ரீலங்கன் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இல்லையெனில், 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது +94 117 77 1979 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுமாறும் ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

தரையிறங்க முடியாத 6 விமானங்கள் இந்தியாவுக்கு
இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் மத்தள, இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, ஓமானின் மஸ்கட்டிலிருந்து வந்த சலாம்எயார் விமானம் OV-437, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டுபாயிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226, மஸ்கட்டிலிருந்து வந்த UL 218, தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து வந்த எயார்ஏசியா விமானம் AK 47 ஆகியவை இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், தம்மாமில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 254, புது டெல்லியில் இருந்து வந்த எயார் இந்தியா விமானம் AI 277 ஆகியவை கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட எயார் ஏசியா விமானம் AK 47, பல முறை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முயற்சித்ததாகவும், பின்னர் வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன