VAT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இறைவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.
குறித்த காலக்கெடுவுக்குள் VAT வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால், சட்ட விதிகளுக்கு அமைய அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் மேற்கொள்ளப்படும் வரி செலுத்துகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்திற்கு கிடைத்தால், அதுவும் தாமதமான வரி செலுத்துகையாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை மாதத்திற்கான VAT வரி அறிக்கையை ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த VAT வரி அறிக்கையை இணையவழி முறையில் சமர்ப்பிக்குமாறும் வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தடுத்து வைக்கப்படும் வரியை (Withholding Tax) ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, வரி செலுத்துவோர் உரிய காலக்கெடுவிற்குள் வரிகளை செலுத்தி, தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய அபராதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.