தாமரை கோபுரம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்.
10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஏனையவர்களுக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 300 மீற்றர் உயரம் கொண்ட இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப்பணிகள், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன் மிகுதியை இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ளது.
தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் அறிவித்ததுடன், 2024ஆம் ஆண்டுக்குள் கடன் தவணைக் கொடுப்பனவுகள் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலி அனுமதி சீட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவது தொடர்பில் சீன தூதரகம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில், சீன தூதரகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரப்படும் அனுமதி சீட்டுக்கள் போலியானது என தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அனுமதி சீட்டை சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து இலவச விளம்பரத்தை வழங்கியமைக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.