மட்டக்களப்பில் அதிகரிக்கும் மற்றுமொரு நோயின் தாக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த மே 22 ஆம் திகதி தொடக்கம் ஜீன் 03 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 28 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த வாரத்தில் டெங்குதாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், கோறளைப்பற்று மத்தி, களுவாஞ்சிகுடி மற்றும் ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தமாக 28 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை வாழைச்சேனை, காத்தான்குடி, பட்டிப்பளை,வவுணதீவு, வாகரை, வெல்லாவெளி, ஓட்டமாவடி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் குறித்த காலப்பகுதிக்குள் இனங்காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரை காலப்பகுதிக்குள் 542 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடத்தில் மாத்திரம் 238 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதுடன், 02 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அதிக டெங்கு நோயாளர்களை இனங்கண்ட பிரிவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு காணப்படுவதாகவும், பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக்கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.