அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது ; உதய கம்மன்பில
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க எனக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். குறித்த பதவியை வகிப்பதற்கான அடிப்படை தகுதியைக் கூட பூர்த்தி செய்யாத அவரது அச்சுறுத்தலால் என்னை ஒருபோதும் மௌனிக்கச் செய்ய முடியாது.
அவரது தகுதிகளை நான் நிரூபிக்க முன்னர் அவர் தானாகவே பதவியை இராஜிநாமா செய்வதே சிறந்ததது என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை
கொழும்பிலுள்ள பிவிதுரு ஹெல உருமய தலைமையகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 2ஆம் திகதி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க ஊடகவியலாளர் மாநாடொன்றில், நான் அவருக்கு எதிராக ஊடகங்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்டால் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் 118ஆம் உறுப்புரைக்கமைய ஆணைக்குழுவை விமர்சித்தாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அவர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராகப் பதவி வகித்தாலும் அதன் குறித்து அவருக்கு போதிய அறிவு இல்லை என்பது தெளிவாகிறது.
அவர் இந்த பதவியை வகிப்பதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யாமல் அதை ஏற்றிருக்கின்றமையே அந்த ஆணைக்குழுவுக்கு இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும். எனது வரலாறு தொடர்பில் தெரியாமல் என்னை அவர் எச்சரிக்கின்றார்.
நான் 6 ஜனாதிபதிகளுடன் ஊழலுக்கு எதிராக போராடியவன். அங்கத்துவம் வகித்த அரசாங்கத்தின் ஊழல் குறித்து பேசி இரு சந்தர்ப்பங்களில் அமைச்சுப்பதவிகளை இழந்திருக்கின்றேன். எனவே அச்சுறுத்தி என்னை மௌனிக்கச் செய்ய முடியாது என்பதை ரங்க திஸாநாயக்கவிடம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர் அந்த பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என்பதை நிரூபிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுப்பேன் என பகிரங்கமாகக் கூறுகின்றேன். எனவே மனசாட்சி இருந்தால் நான் உண்மைகளை வெளிப்படுத்த முன்னர் உடனடியாக பதவி விலகுமாறு அவரை வலியுறுத்துகின்றேன்.
இவரை பதவியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கடந்த வாரம் மிகவும் இரகசியமாக மீளப் பெறப்பட்டுள்ளது. எனவே தற்போது அது தொடர்பிலும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி வெற்றிடத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முதலாவது தகுதி குற்றவியல் வழக்கு தொடர்பில் ஆகக் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் உடைய சட்டத்தரணியாக இருக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் ரங்க திஸாநாயக்கவுக்கு இது குறித்து ஒரு நாள் அனுபவம் கூட இல்லை. அடிப்படை தகுதி கூட அற்ற அவர் தனக்கு நிச்சயம் இந்த நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே விண்ணப்பித்திருக்கின்றார்.
இது தொடர்பில் நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். எனவே அதற்கு முன்னர் கௌரவத்துடன் பதவியை இராஜிநாமா செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.