இலங்கையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு IMF அறிவிப்பு
இலங்கை மின்சார சபை ஜனவரி மாதத்தில் நாட்டின் மின்சாரக் கட்டணத்தை திருத்தியுள்ள போதிலும் மின்சார உற்பத்திச் செலவுகளை புதிய கட்டணத்தால் ஈடுகட்ட முடியாதென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மூன்றாவது மதிப்பாய்விற்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதலை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் நடைபெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தைப் பார்க்கும்போது, புதிய கட்டணத்தின் கீழ் இலங்கை மின்சார சபையினால் இழப்புகளைத் தடுக்க முடியாது என்பது தெளிவாகிறது.
இதன் காரணமாக இலங்கை மின்சார சபையின் கடன்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பின்னர் இலங்கை மின்சார சபை மீண்டும் அரசாங்கத்திற்கு சுமையாக மாறும்.
இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் அனுபவம் உள்ளதால், வரவிருக்கும் மின்சார கட்டண திருத்தத்தில் செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீண்டும் நிர்ணயிப்பது அவசியம்.
இழப்புகளை ஏற்படுத்தாத வகையில் விலைகளை நிர்ணயிப்பதற்கான தானியங்கி வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன. அவை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.