இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் விடுத்த அவசர நிதியுதவிக் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து, விரைவு நிதியளிப்பு வசதி தொடர்பான கோரிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தற்போது பரிசீலனை செய்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இலங்கையின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் தொடங்குவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

அத்துடன், விரைவு நிதியளிப்பு வசதியின் கீழ் வழங்கப்படும் இந்த அவசர ஆதரவானது, இலங்கைக்கு ஏற்கெனவே உள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்ட அணுகலுடன் மேலதிகமாக வழங்கப்படும் நிதி என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியின் தாக்கத்தையடுத்து, இலங்கை சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்காக, விரைவு நிதியளிப்பு வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.