IMF கடன் மறுசீரமைப்பின் மூன்றாவது மதிப்பாய்வு கூட்டம் எதிர்வரும் வாரங்களில்
இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் ஆராய்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் வாரங்களில் நடைபெறும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடக சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடும் எட்டப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் நிறைவேற்று சபை ஆராய்ந்து அனுமதியளித்ததன் பின்னர் இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசக் தெரிவித்துள்ளார்.