தையிட்டி சட்டவிரோத விகாரை மதவாதமோ இனவாதமோ அல்ல ; வேலன் சுவாமிகள்
யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல என்றும், இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை எனவும் பொத்துவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வலி.வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடை உத்தரவை மீறி விகாரை கட்டப்பட்டது
இந்த விடயத்தில் நீதிமன்றத்தில் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் போராட்டமே இதற்கு வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
வலி. வடக்கு தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கு தெரியாமல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது அடாத்தாக பிடித்து விகாரை அமைத்துள்ளனர்.
விகாரை கட்டும் வரை எங்கிருந்தீர்கள்? ஏன் அப்போது தடுக்கவில்லை என்று சிலர் இப்போது கேட்கிறார்கள்.
விகாரை கட்டுவது யாருக்கும் தெரியாமல் இருந்தது. மக்களுடைய காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் யாரையும் உள்நுழைய விடவில்லை. விகாரையின் கட்டுமானங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடல்களில் முறையாக பேசப்பட்டது. கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது.
அதனையும் மீறி அரச படைகளின் பாதுகாப்புடன் குறித்த விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். இன்னும் சிலர் கேட்கிறார்கள்.
தனியார் காணிகள் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை என்கிறார்கள். குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்பட்டபோது நீதி கிடைக்கும் என நம்பி நீதிமன்றம் சென்றோம்.
தடை உத்தரவு வழங்கியதையும் மீறி விகாரை கட்டப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. போராட்டமே இதற்கு வழி என்றும் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.