முல்லைத்தீவில் சட்டவிரோத உப்பள விவகாரம் ; நேரில் சென்று ஆராய்ந்த எம்.ஏ.சுமந்திரன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், குஞ்சுக்கால்வெளிப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை மகாவலி அதிகாரசபை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புசெய்து பெரும்பான்மை இனத்தவருக்கு உப்பளம் அமைப்பதற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்த மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பள விவகாரம் தொடர்பில் சுமந்திரன் கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக பிணக்கிற்குரிய குறித்த பகுதியையும் எம்.ஏ. சுமந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், குறித்த சட்டவிரோத செயற்பாட்டிற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.