கடற்படையினர் சோதனையில் புதர்க்காட்டில் சிக்கிய சட்டவிரோத பொருட்கள்
கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியிலும் மற்றும் சிலாபம் கருக்கப்பனைப் பகுதியிலும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மருந்துப் பொருட்கள் மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனம் கற்பிட்டி கீரிமுந்தல் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொதியானது சோதனையிடப்பட்டது.
மேலதிக சட்ட நடவடிக்கை
அதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் எழுபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து அறுபது (71,960) மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் 'தம்பபண்ணி' நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சிலாபம் கருக்கப்பனைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பத்து (10) பொதிகள் சோதனையிடப்பட்டன.
அதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று ஒரு (401) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் மீட்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடமும், பீடி இலைகள் சிலாபம் மதுவரி திணைக்கள அலுவலகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.