கட்டுநாயக்கவில் நட்சத்திர ஹோட்டல் என்ற போர்வையில் அரங்கேறும் செயல் ; வெடித்த போராட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திப்புக்கு அருகில், சுற்றுலா ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறி, சிமெந்து உற்பத்தி மற்றும் பொதியிடும் தொழிற்சாலை ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக பிரதேசவாசிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த திட்டத்திற்கான கட்டிட வரைபடத்திற்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அன்று மத்திய சுற்றாடல் அதிகார சபையும், அதற்கான அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தை கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி அன்று நகர அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கியுள்ளன

அனுமதிப்பத்திரம்
ஆரம்பத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில், 3,857 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒற்றை மாடி கட்டிடத்திற்காகவே அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனினும், பின்னர் அது 12,925 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட 5 மாடி சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலைக்கான அனுமதிப்பத்திரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்க பிரதான வீதியில் இருந்து நீர்கொழும்பு களப்பு வரை இந்த கட்டுமானப் பகுதி விரிவடைந்துள்ளது.
தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; அக்காவின் மகளை பார்க்க சென்று நடந்த சம்பவம்
இதன் காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க விமான நிலையம், அப்பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள், 3 சர்வதேச பாடசாலைகள், நீர்கொழும்பு களப்பு மற்றும் அதனை நம்பி வாழும் மீனவ சமூகம், விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள லியனகேமுல்ல கண்டல் தாவர காடுகள், கட்டுநாயக்க வர்த்தக வலய பெண் ஊழியர்களின் விடுதிகள் மற்றும் முத்துராஜவெல சுற்றுலா படகு தொழிலாளர்கள் என பல தரப்பினரும் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிக மக்கள் நடமாட்டமும், சுற்றுலா மற்றும் வணிகத் துறையும் நிறைந்த இப்பகுதியில், சிமெந்து தூசிகளினால் சூழல் மாசடைவது பாரிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரச அதிகாரிகள் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வழங்கிய அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிபந்தனைகளையும் மீறி இக்கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருகிறது.
அத்துடன், இந்த தொழிற்சாலை தொடர்பான எந்தவொரு விபரப் பலகையும் கட்டுமானப் பூமியில் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.