சொந்த வீடு கட்ட வேண்டுமா அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்
சொந்த வீடு என்பது பலருடைய லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தை நோக்கி பல முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு தான் வருகிறார்கள்.
சிறுக சிறுக சேர்த்து வைத்து கஷ்டப்பட்டு மனையை வாங்கி போட்டுவிட்டு பிறகு அதில் வீடு கட்ட முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள்.
கையில் பணம் வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாத சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். வாடகை வீட்டில் குடி இருக்கும் பொழுது பல பிரச்சினைகள் ஏற்படும்.
அப்பொழுதெல்லாம் நமக்கென்று சொந்த வீடு இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா என்று வருத்தப்படுவோம்.
அதற்காக நம்முடைய வருமானத்தில் சிறுக சிறுக சேர்த்து வைப்போம். அப்படி சேர்த்து வைத்து ஒரு குறிப்பிட்ட அளவு முதலீட்டை நம்மிடம் வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு தடங்கல்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.
அந்த தடங்கல்களை நிவர்த்தி செய்வதற்கும் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டுவதற்கும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.
பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு நமக்கு மூன்று செங்கல் தேவைப்படுகிறது. இந்த மூன்றும் உடையாத வண்ணம் நன்றாக இருக்க வேண்டும்.
இவை மூன்றையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். தெரிந்த அல்லது அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு மலையில் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இந்த மூன்று செங்கல் கல்லையும் யார் வீடு கட்ட வேண்டுமோ அவர் எடுத்துக்கொண்டு படியேறி கோவிலை அடைய வேண்டும்.
செங்கல் வைத்தல்
எடுத்துக்கொண்டு சென்ற மூன்று செங்கல் கற்களில் ஒன்றை கோவிலின் வளாகத்தில் வைத்து விட வேண்டும்.
மற்றொன்றை சுவாமியின் திருவடிகளில் வைத்து விட வேண்டும். அவ்வாறு வைக்க முடியாத பட்சத்தில் சுவாமிக்கு எதிரே ஓரிடத்தில் வைக்கலாம் அல்லது மூலவரை சுற்றி இருக்கும் ஏதாவது ஒரு சுவாமிக்கு முன்பாக அந்த செங்கலை வைத்து விட வேண்டும்.
மூன்றாவது செங்கலை நாம் திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். மலை இறங்கிய பிறகு நம்மால் இயன்ற அளவு ஏதாவது தான தர்மத்தை செய்து விட்டு பிறகு வீட்டிற்கு வர வேண்டும்.
வீட்டிற்கு எடுத்து வந்த செங்கலை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அன்றாடம் நம் பூஜை செய்யும் பொழுது அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து பூ போட்டு பூஜை செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது முறை செய்யும் பொழுது சிறு சிறு கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி மனதார வேண்டிக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய வீடு கட்டும் கனவு நிறைவேறும். பூமி பூஜை செய்யும் பொழுது நாம் நம் வீட்டு பூஜை அறையில் வைத்திருந்த இந்த செங்கல்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை முடிந்த அளவு செவ்வாய்க்கிழமை அன்று செய்தால் மிகவும் நன்மை பயக்கும்.