மஹிந்தவின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்! மொட்டு உறுப்பினர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு பலமுறை அறிக்கை சமர்ப்பித்துள்ள பின்னணியில் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை தவறானதொரு தீர்மானமாகும் என மொட்டு கட்சியின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்றையதினம் (23-12-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி, 2024.10.10 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷசவின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்த 13 அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 04 புலனாய்வு பிரிவின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இன்றும் செயற்படுகின்றன.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.