தேர்தலைக் காலம் தாழ்த்த யோசனையா? நாளை இடம்பெறவுள்ள முக்கிய உரை!
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாளை ஆற்றவுள்ள அக்கிராசன உரையின் போது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும், அதற்கு ஆளுந்தரப்பு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பில் இன்றையதினம் (07-02-2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இயலுமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை. நாட்டின் நிதி நெருக்கடிகள் அடிப்படையில் அரசாங்கத்தினால் செய்ய முடிந்தவை தொடர்பிலும், செய்ய முடியாதவை தொடர்பிலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.
வரி மற்றும் வரியல்லா வருமானமாக அரசாங்கத்திற்கு 158 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது.
எனவே செலுத்த வேண்டிய கடன்கள் பணம் அச்சிடப்பட்டே செலுத்தப்பட்டுள்ளது. நிதி முகாமைத்துவ அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி முகாமைத்துவம் எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல தரப்பினராலும் யோசனைகளை முன்வைக்க முடியும். அது அவர்களின் பொறுப்பாகும். ஆனால் அவ்வாறானதொரு முறைமை காணப்படுவதாக தெரியவில்லை”- என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.