இலங்கையில் அறிமுகமாகும் நீர் மின்கல திட்டம்
இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, மொத்தம் 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம், அதிகப்படியான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது மீண்டும் மின் கட்டமைப்புக்கு வழங்கும் என மின்சார சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தி இலக்கு
2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலங்கையின் இலக்கை அடைவதற்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டம் ஒரு பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாக காணப்படுவதுடன், இது அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு நீர்த்தேக்கங்களையும் 2.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் இணைப்பதன் மூலம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்திற்காக புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் இலக்கை அடைந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய இலங்கையின் மாற்றப் பயணத்தை தொடங்க முடியும் என மின்சார சபை அறிக்கையில் தெரிவித்துள்ளது.