1000 கோடி ரூபா பண மோசடி தொடர்பில் கணவன் மனைவி கைது
குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த மோசடி தொடர்பில் நிறுவனத்தின் உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை (08) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
52 வயதான குருணாகலைச் சேர்ந்த இவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வௌ்ளிக்கிழமை (08) அதிகாலை 12.00 மணியளவில் வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வருகை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சாளரத்திற்குச் செல்வதற்கு முன்னர் அவரை கைது செய்தனர்.
சந்தேக நபரை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளரான 42 வயதுடைய அவரது மனைவியும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஜேடி'ஸ் பிசினஸ் ஸ்கூல்" என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நிறுவி, சுமார் 2,500 வைப்பாளர்களை ஏமாற்றி, குருநாகல் நகரின் மையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அந்தப் பகுதியில் இரண்டு பெரிய நிலங்களை வாங்கி, இயக்குநர் ஒருவரின் பெயரில் இலங்கையில் உள்ள 03 முக்கிய வங்கிகளின் இந்த நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான 11 கணக்குகள் பராமரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.