ஆசிட் குடிக்க வைத்த கணவன், மாமியார் ; இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற குடும்பம்
கூடுதல் வரதட்சணை கேட்டு வாயில் ஆசிட் ஊற்றி குடிக்க வைத்து இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் கணவன், மாமியார், மாமனாரிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்தவர் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியை சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
கூடுதல் வரதட்சணை
திருமணத்துக்கு பிறகு கணவர் வீட்டில் குல் பைசா மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷும் அவரது குடும்பத்தினரும் குல் பைசாவை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது
இந்நிலையில், கடந்த 12ம் தேதி மீண்டும் கூடுதல் வரதட்சணை கேட்டு, பர்வேஷ், அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து குல் பைசாவை தாக்கியுள்ளனர். மேலும் குல் பைசாவின் வாயில் ஆசிட் ஊற்றி, அதை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர் ஆசிட் குடித்ததால் வாய், தொண்டை, குடல் பகுதிகள் வெந்தது. அலறி துடித்துள்ளார்.
இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 17 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.