சஜித், மகிந்த, மைத்ரிக்கு ரணில் விடுத்துள்ள விசேட அழைப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில் கருத்துரைத்த ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையே முதல் படியாக இருக்கும் என்று குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு
அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிதியைப் பயன்படுத்தித் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிப்பதாகக் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, குறித்த மாநாட்டை பொதுவான ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பிளவுக்குப் பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உறவு வலுவடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.