வெளிநாட்டில் இருந்த கணவருக்கு அதிர்ச்சி ; காணாமல் போன மனைவி மற்றும் மகன் மீட்பு
கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் பாதுகாப்பாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தகவல்களின்படி, கடந்த 9ஆம் திகதி ஷஹ்லா என்ற பெண், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், அவரது கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய பின்னரே மனைவியும் மகனும் காணாமல் போனதை அறிந்த கணவர், பாலுச்சேரி காவல்துறையில் முறைப்பாடு செய்தார்.
வெளிநாட்டில் இருந்த காலத்திலும் தினமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், மனைவியின் நடவடிக்கையில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷஹ்லாவும் அவருடன் சென்றதாகக் கூறப்படும் நபரும் கண்டறியப்பட்டனர். இதையடுத்து, 7 வயது சிறுவன் பாதுகாப்பாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாலுச்சேரி காவல்துறை முன்னெடுத்து வருகிறது.