யாழ்.விமான நிலையத்திற்கு எப்படி செல்வது? தொடரும் இழுபறி நிலை!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையிலீடுபடவுள்ள நிலையில் பாதை தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வலிகாமம் வடக்கில் கட்டுவன்-மயிலிட்டி வீதியில் (மயிலிட்டி தெற்கில்) 400 மீட்டர் வரையான வீதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இந்த வீதி பிரச்சினையினை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பிரச்சினை தொடர்பில் பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலர் ஆகியோர் அங்கஜனுக்கு விளக்கமளித்தனர்.
இந்த வீதியே யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பிரதான விதியாக மாற்றப்பட்ட நிலையில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள ஒருபகுதி வீதி யாழ் விமான நிலையத்துக்கான தடங்கலாக தொடர்ந்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில் நாளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க யாழ்ப்பாணம் வரவுள்ளதுடன் அவருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சம்மந்தப்பட்டோருக்கு தெரிவித்தார்.
