Gym செல்லாமல் தொப்பையை குறைக்க இதுதான் வழிமுறை ; சிம்பிள் டிப்ஸ்
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது தொப்பை அதிகரிப்பதாகும். உணவு அளவைக் குறைத்தும், நடைப்பயிற்சி செய்தும் தொப்பை குறையவில்லை என சிலர் கவலைப்படுகின்றனர்.
தொப்பையைக் குறைப்பதற்கு முன், அது உருவாகும் காரணங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

உடற்பயிற்சி
இதற்கமைய, ஆரோக்கியமற்ற உணவுமுறை, அதிக சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுகள், இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டு உடனடியாக உறங்குவது, போதிய தூக்கமின்மை, உடல் இயக்கம் குறைவாக இருப்பது மற்றும் மனஅழுத்தம் போன்றவை தொப்பை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
குறிப்பாக, மனஅழுத்தம் அதிகரிக்கும்போது கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கலாம். இதனால் சிலருக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமான கலோரிகளை உணவின் மூலம் எடுத்துக்கொண்டு, அவற்றை உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் மூலம் செலவிடாமல் இருப்பதும் உடலில் கொழுப்பு சேமிக்க வழிவகுக்கும்.
இதனால் கை, கால்கள் ஒல்லியாக இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்பு அதிகமாகத் தோன்றும் நிலை சிலருக்கு ஏற்படலாம்.
தொப்பையைக் குறைக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம் முக்கியமானது. சர்க்கரை, குளிர்பானங்கள் மற்றும் பேக்கரி உணவுகளை குறைத்து, சாப்பிடும் போது சோறு அளவோடு எடுத்துக்கொண்டு காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
இரவு உணவை முடிந்தவரை சீக்கிரமாகவும், அளவோடும் சாப்பிடுவது நல்லது. போதுமான தண்ணீர் அருந்துவதும், தினமும் சுமார் 6 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம் பெறுவதும் உடல் எடை கட்டுப்பாட்டுக்கு உதவும். மேலும், தொப்பை கொழுப்பைக் குறைக்க வழக்கமான உடற்பயிற்சியும் முக்கியம்.
ஜிம்முக்குச் செல்ல வேண்டியது கட்டாயமில்லை. தினசரி நடைப்பயிற்சி மற்றும் உடலின் முக்கிய தசைகளை இயக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது உதவியாக இருக்கும்.
தொப்பை ஒரு நாளில் உருவாகாததால், ஒரே நாளில் குறைத்துவிடவும் முடியாது. சரியான உணவு, போதுமான தூக்கம் மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி ஆகியவற்றை வாழ்க்கை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.