ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்கள்தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா
மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.
தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது. இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.

இதை எவ்வாறு சாப்பிடலாம்
மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.
இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும். தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.
மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.