மனைவியுடன் கோட்டாபய விமானத்தில் தப்பியோடியது எப்படி? அடுத்த திட்டம் என்ன?
மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத்தின் துணையுடன் மாலத்தீவுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ நுழைந்திருக்கிறார். மேலும் அங்கிருந்து அடுத்து சிங்கப்பூருக்கு பறக்கவிருக்கிறாரா? தற்போது கேள்வியாக இருக்கிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருவதால், அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி மக்கள் போராடிவருகின்றனர்.
மக்கள் போராட்டங்களை சற்றும் கண்டு கொள்ளாத அதிபர் கோட்டாபய, தனது பதவியைக் காப்பாற்றும் வேலைகளில் தீவிரமாக இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், கடந்த ஜூன் 9 அன்று அதிபர் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
காவல்துறை, ராணுவத் தடுப்புகளை மீறி மக்கள் உள்ளே நுழைந்த செய்தி அறிந்த கோட்டாபய ராஜபக்ஷ, வேறு வழியாகத் தப்பிச் சென்றார்.
முதலில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பியவர், தற்போது நாட்டிலிருந்தே தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்துவிட்டார். மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்லவும் திட்டமிட்டுவருகிறார்.
கோட்டாபய, இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு எப்படித் தப்பிச் சென்றார்... அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை இங்கே பார்ப்போம்!
ஜூலை 9 அன்று, கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிவந்த மக்களில் ஆயிரக்கணக்கானோர், ஆக்ரோஷத்துடன் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.
மக்கள் அங்கு வருவதற்கு முன்பாகவே மாளிகையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார் கோட்டாபய. மாளிகைக்குள் நுழைந்த மக்கள், ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு பகுதியாக ஆராயத் தொடங்கினர்.
அப்போது அங்கு ஒரு பகுதியில் சுரங்க வழி இருப்பதை அவர்கள் கண்டனர். அந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று மக்களில் சிலர் தெரிவித்தனர்.
ஜானதிபதி மாளிகையிலிருந்து தப்பிய கோத்தபய எங்கு பதுங்கியிருக்கிறார் என்ற தகவல்கள் எதுவும், முதலில் வெளியாகாமலேயே இருந்தன.
பின்னர் அவர், இலங்கையிலுள்ள ஏதாவது ஒரு ராணுவ முகாமில்தான் இருக்க வேண்டும் என்ற யூகங்கள் கிளம்பின.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை (ஜூன் 11) மாலை வேளையில் கோத்தபய, இலங்கை விமான நிலையத்துக்கு வந்ததாகவும், துபாய் செல்ல முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அவர் துபாய் செல்ல ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஜூன் 11-ம் திகதி மாலை முதல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புறப்படவிருந்த நான்கு விமானங்களில் துபாய் செல்ல கோட்டாபயவும், அவரின் மனைவியும் முயன்றதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், நான்கு முறையும் அவர்கள் பயணிக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 13 அன்று அதிகாலை 3 மணி அளவில், மாலத்தீவின் தலைநகர் மாலேவுக்குச் சென்று இறங்கியிருக்கிறார் கோட்டாபய.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளில், `ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிய பிறகு விமான நிலையம் அருகிலிருக்கும் ராணுவ முகாமில்தான் இருந்திருக்கிறார் கோட்டாபய. அங்கிருந்து நான்கு முறை துபாய் தப்ப முயன்றிருக்கிறார்.
அதன் பிறகுதான், மாலத்தீவுக்குத் தப்பிச் செல்லும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். முதலில், `இன்னும் கோட்டாபய இலங்கை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை. எனவே, அவரை நமது நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது' என்று மறுத்திருக்கிறது மாலத்தீவு அரசு.
பின்னர், மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத் (Mohamed Nasheed) நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கோட்டாபய மாலத்தீவுக்குள் வர அனுமதி கிடைத்திருக்கிறது.
இதையடுத்து, இலங்கையிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கை விமானப்படையின் AN32 ரக விமானத்தில் கோட்டாபய மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்.
அந்த விமானத்தில் கோட்டாபய, அவரின் மனைவி, பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் மாலத்தீவுக்குச் சென்றிருக்கின்றனர்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.’
தப்பியோடியது குறித்துப் பேசும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், ``ஜூன் 13-ம் திகதி பதவியை கோட்டாபய ராஜினாமா செய்வதாக இருந்தார். எனவே அதற்குள்ளாக நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது.
ஜனாதிபதி பதவியிலிருக்கும்போது அவரைக் கைதுசெய்ய முடியாது என்பதால்தான், பதவி விலகும் முன் தப்பியோட நினைத்தார். அதைப்போலவே, பதவி விலகும் முன்னரே மாலத்தீவுக்கு ஓடிவிட்டார்'' என்கின்றனர்.