பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமான வீடு முற்றுகை; மாணவர்கள் போராட்டம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மாணவர்கள் நேற்று (14) இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

பல்கலைக்கழக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்
பசில் ராஜபக்ச வீட்டையும், அதை அமைந்துள்ள நிலத்தையும் பொதுப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கக் கோரி அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் போராட்டத்தைத் தொடங்கினர்.
மல்வானவில் உள்ள 16 ஏக்கர் நிலத்தையும் கட்டிடத்தையும் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அதனைப் பல்கலைக்கழக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக அமைப்பில் தற்போது நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இத்தகைய சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்துவது மட்டுமல்லாமல், மாணவர் சமூகத்தின் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் அவை வழங்கப்பட வேண்டும் என்று மாணவர் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மக்களிடமே திருப்பித் தருவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அந்த வீடும் நிலமும் பல்கலைக்கழகங்களுக்கும் பிற அரசாங்க நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக கொழும்புப் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் நிலவும் இடப் பிரச்சினைக்குத் தீர்வாக இந்த நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் வாதமாகும்.