மஹிந்த ராஜபக்ஷ பெயர் நீக்கப்படும்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் இருந்து நீக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தின் கட்டுமானத்தில் பெரும் தொகை வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், வளாகம் இப்போது பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படி, மஹிந்தவின் பெயரில் மைதானம் காணப்பட்டால், எந்த தனியார் துறை முதலீட்டாளர்களும், இணைந்து விளையாட்டு வளாகத்தை நடத்துவதற்கு பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆண்டிற்கு முன்பு விளையாட்டு வளாகத்திற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு கொள்கலன்களில் மில்லியன் கணக்கான ரூபா மதிப்புள்ள ஜெனரேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த விளையாட்டு வளாகத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் சுனில் குமார கமகே கூறியுள்ளார்.