ஹிருணிக்கா பிரேமச்சந்திர பிணையில் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
50,000 ரூபாய் காசு பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்லவும் அத்துடன் வெளிநாட்டு பயணத் தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கடத்திச் சென்று தாக்குதல்
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு நிற டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று, தடுத்து வைத்து தாக்கியதாக முன்வைக்கப்பட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் இந்த பிணை கோரிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.