சிறைத்தண்டனையை எதிர்த்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேன்முறையீடு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை பரிசீலித்த போது நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு மனு மேல்நடவடிக்கைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக அறிவிப்பு
இதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய முன்னிலையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்வதற்காக நீதிபதிகள் பி. குமாரரத்தினம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோருடன் தாம் உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட குழாமை நீதிபதி அபேசூரிய நியமித்தார்.
மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட குழாம் முன்னிலையில் 2027 ஜனவரி 21 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை டிபெண்டர் ரக வாகனத்தைப் பயன்படுத்தி கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து, மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்தது.
இதனையடுத்து, விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் தீர்ப்பை ரத்து செய்து, தம்மை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.