தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு உடனடியாக தலைவர் ஒருவரை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் ஜனாதிபதியின் செயலாளர், சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் அரசியலமைப்பு பேரவையில் பல உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் பதவி சுமார் ஆறு மாதங்களாக வெற்றிடமாக இருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் விலகலின் பின்னர் குறித்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வெற்றிடம் நிலவும் குறித்த பதவிக்கு ஜனாதிபதி, புதிய தலைவரையோ அல்லது இடைக்கால தலைவரையோ நியமிக்கவில்லை என்பதையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சூழ்நிலை தகவல் கோரிக்கைகள் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளதாகவும் இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.