ஜனாதிபதி அனுரவை சந்தித்த மூன்று நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை , கனடா, அவுஸ்திரேலியா மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள் சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கனடாவில் இலங்கை மக்கள்
தனது பதவிக் காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் எரிக் வொல்ஷின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்துத் தெரிவித்தார்.
கனடாவில் இலங்கை மக்கள் அதிகளவில் வசிப்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும், இந்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கச் செயல்முறைக்கும் கனடா வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரவை சந்தித்தார்.
கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய இராஜதந்திரிகள் பலர் இந்நாட்டுக்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.
மலேசிய உயர்ஸ்தானிகர்
மேலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.