மோடி- ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் நேருவின் புகைப்படம் இடம்பெற்றதா இல்லையா?
ஜெர்மனியில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சினை(Olab Scolcin), பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் புகைப்படம் இடம்பெற்றதா, இல்லையா என்பது பற்றிய உண்மை தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் குறைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள துவங்கி உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார்.
அதாவது ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் மேற்கொண்டார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார். அங்கு ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்சினை(Olab Scolcin) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
9 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாட்ஸ்டேமர் பிளாட்ஸில் உள்ள திரையரங்கில் புலம்பெயர் இந்தியர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ‛2024 மோடி ஒன்ஸ்மோர்' என கோஷங்கள் எழுப்பப்பபட்டன.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்சினை(Olab Scolcin) சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவுகிறது. இந்த படத்தில் நரேந்திர மோடி, ஓலப் ஸ்கால்சின்(Olab Scolcin) ஆகியோர் அமர்ந்து பேசும் நிலையில் இருவருக்கும் இடையே சுவற்றில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் படம் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தை காங்கிரஸ் கட்சியினர் வேகமாக இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். நேருவின் புகழ் கடல் கடந்தும் பரவி உள்ளது என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதுபற்றி பீகார் மாநில மகளிர் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை பதிவிட்டு, ‛‛ஜெர்மன் சான்சலருக்கும், நம் பிரதமருக்கும் இடையே நேருவின் புகைப்படம்?. ஹே ராம், என்ன நடக்கிறது? நேருவை அழிக்க நிறைய முயற்சி செய்தீர்கள்.
ஆனால் இந்தியாவின் நேருவை அழிப்பது எளிதானதா? என கேள்வி வடிவில் பதிவிட்டு இருந்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பயணத்தில் எங்கும் நேருவின் புகைப்படம் இல்லை. இது போட்டோஷாப் செய்யப்பட்டு போலியாக பரப்பப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.
மேலும் காங்கிரஸ் கட்சியினர் உண்மை அறியாமல் போலியான படத்தை வெளியிடுவதாக குற்றம்சாட்டினர். மேலும் பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அலுவலகம் கையாளும் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்த அதே படங்களை வெளியிட்டனர்.
இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின்(Olab Scolcin) ஆகியோருக்கு நடுவே நேருவின் படம் இடம்பெறவில்லை.
இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின்(Olab Scolcin) இடையே நேருவின் படம் இருக்கும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
