முச்சக்கரவண்டியில் ஹெரோயின் ; மூவர் கைது
வத்தளை பிரதேசத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 48 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் வத்தளை பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டி ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.