நாட்டில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை
இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த வளிமண்டல தாழமுக்கம், தற்போது குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவெளை ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.