இலங்கையின் மிகப்பெரிய நீர்தேக்கத்தின் 5 வான் கதவுகள் திறப்பு!
கடும் மழை காரணமாக அம்பாறையில் உள்ள இலங்கையின் மிகப்பெரிய நீர்தேக்கமான சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 5 வான் கதவுகளை தலா 6 அங்குலம் வீதம் திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திறப்புகளை 12 அங்குலமாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே சேனநாயக்க சமுத்திரத்தைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஜனவரி 21 ஆம் திகதி காலை 7.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில், மகாவலி ஆற்றுப் படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாவலி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று (19) கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் மகாவலி ஆற்றுப் படுகைகளின் ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், திம்புலாகலை, எச்சிலம்பத்தை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மகாவலி ஆற்றைச் சூழவுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அப்பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.