மத்திய மலைநாட்டில் கனமழை; பெருக்கெடுத்தோடும் வெள்ளம்
மத்திய மலைநாட்டில் தொடரும் கனமழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளதால், ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையினால் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான இடங்களில் நீர் புகுந்துள்ளது
காஸ்ட்ல்ரீ நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய முக்கிய நீர்வழிகளில் ஒன்றான கெசல்கமுவ ஓயா அதன் கொள்ளளவைத் தாண்டி பெருக்கெடுத்தமையால், பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் நீர் புகுந்துள்ளதுடன் சில கட்டிடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
நோர்வுட், பொகவந்தலாவ, ஹட்டன் மற்றும் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், நுவரெலியா மாவட்டத்தின் நோர்வுட் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக ஹட்டன்–பொகவந்தலாவ–மஸ்கெலியா–பலாங்கொடை பிரதான வீதியில் டிக்கோயா மற்றும் வனராஜா தோட்டப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை தொடரக்கூடும் எனவும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.