நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு; 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பு
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நாளை (07) பல பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.