திங்கட்கிழமைகளில் அதிகம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு; ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில் மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி இருந்த நிலையில் , தற்போது அந்த ஆய்வு மீண்டும் கவனம் பெற்று வருகிறது.
பெல்ஃபாஸ்ட் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் இன் அயர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
2013 முதல் 2018 வரை ஆய்வு
STEMI எனப்படும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10,528 நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அயர்லாந்து தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
STEMI என்பது இதயத்திற்கு இரத்தம் வழங்கும் முக்கிய கரோனரி தமனி முழுவதுமாக அடைக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போய்விடும்.
அதேசமயம் இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் அதிகமானோர் STEMI காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
'ப்ளூ மண்டே'
இந்த சிகிச்சை மூலம் அடைபட்ட கரோனரி தமனியைத் திறந்து, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.
பிரச்சனை என்னவெனில், வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
திங்கட்கிழமைகளில் இது மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13% அதிகமாக இருந்தது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் STEMI சதவீதம் அதிகமாக இருந்தது. இப்படி திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதை 'ப்ளூ மண்டே' என்று அழைப்பார்கள். இந்த விளைவுகளுக்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் முழுயைமாக தெரியவில்லை.