கொரோனா பரவலுக்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் இதய நோய்களும் மாரடைப்பு மரணங்களும் அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma.Subramanian) தெரிவித்துள்ளார்.
சென்னையில் தண்டையார் பேட்டையில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது,
சின்ன வயதில் இருந்தே எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இல்லை. நான் எப்போதும் புத்தகம் படிக்கும் புத்தகப்புழுவாகவே இருந்தேன்.
அப்படி படிக்கும் காலங்களில் நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டேன். அதனால் போராடி வந்தேன். பின்னர் ஒரு விபத்தில் சிக்கினேன். நீங்கள் இன்றும் நாளாந்தம் நாளேடுகளை எடுத்து பார்த்தால் மா.சுப்பிரமணியன் கவலைக்கிடம் என 30 வருடங்களுக்கு வெளியான செய்தி இருக்கும்.
இனிமேல் நான் வேகமாக நடக்கக் கூடாது என்றும் சம்மணம் போட்டு உட்காரக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இருப்பினும் அவர்கள் முன்பே இன்று வரை நான் மாரத்தான் போட்டிகளில் ஓடி வருகிறேன். பத்மாசனம் யோகாவில் அமர்ந்திருக்கிறேன். இதெல்லாமே முயற்சிதான். ஓடுவதில் நான் உலக சாதனை செய்திருக்கிறேன்.
ஊட்டியில் கடந்த வாரம் தொடர்ந்து 30 கி.மீ தொலைவு ஓடினேன். தினமும் 10 முதல் 15 கிலோ மீட்டர் நடந்தால்தான் எனக்கு உணவு உண்ணவே முடியும். இரு ஆண்டுகளில் 500 மணி நேரம் ஓட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தேன்.
ஈரேடு இடைத்தேர்தல் பிரச்சாரம், கடந்த மாதம் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டதால் என்னால் ஓட முடியவில்லை. இந்த மாதம் இதுவரை 30 கிலோ மீட்டர் ஓடியிருக்கிறேன்.
கொரோனா அலைக்கு பிறகு மாரடைப்பு, இதய கோளாறு போன்ற மரணங்கள் நிறைய ஏற்பட்டது. ரூ 12 கோடி ஒதுக்கி 3 மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை சிறந்த முறையில் செய்து வருகிறார்கள் என்றார்.