கொழும்பு பகுதியில் தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! விசாரணையில் திடீர் திருப்பம்
படல்கும்புர - பசறை பிரதான வீதியின் அலுபொத பிரதேசத்தில் மனித மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 11ஆவது கிலோமீற்றல் கல்லுக்கு அருகில் உள்ள பாழடைந்த பகுதியொன்றிலிருந்து இந்த மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு டேம் வீதியில், பயணப்பையொன்றிலிருந்து தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்திற்கும் கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுக்கும் தொடர்பு உள்ளதா எனக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, சபுகஸ்கந்த பிரதேசத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சடலம் பயணப்பையில் வைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபுகஸ்கந்த - மாபிம பகுதியில் உள்ள குப்பை மேடு ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பயணப்பையொன்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்ற பெண் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் நேற்று (07) மஹர பதில் நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, இன்று (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள மற்றைய நபர் கொல்லப்பட்ட பாத்திமா மும்தாஸின் கையடக்கத் தொலைபேசியை அப்பகுதியில் உள்ள வேறு ஒருவருக்கு விற்று பணம் பெற்று அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.