கறிவேப்பிலையாக பயன்படுத்தி விட்டனர்; முன்னாள் ஜனாதிபதி வருத்தம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் , ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மைத்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடே குழப்பத்துக்குள் சிக்கித் தவிக்கிறது என்றுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ,
அம்மையார் காலத்தில் கூட இவ்வாறு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அன்று வரிசையில் நின்றிருந்த மக்கள், தூசனங்களை பேசவில்லை என்றும், நாட்டை ஆட்சி செய்யவேண்டுமாயின் நல்ல குழுவொன்று இருக்கவேண்டுமெனவும் மைத்திரி கூறினார்.
அதேசமயம் தனியாக நின்றுக்கொண்டு நாட்டை ஆட்சிசெய்யமுடியாது என தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தை, சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நீடித்துக்கொள்வதற்கு தயாராக வேண்டாமென தான் கேட்டுக்கொள்வதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.