ரணில் , சஜித்தை பிரதமராக்க அழைத்துள்ளாரா? வெளியே கசிந்த தகவல்கள்
ரணில் , சஜித்தை பிரதமராக்க அழைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் தேசிய அரசொன்றை அமைத்து நாட்டை மீட்பது நல்ல விடயம்தான்.
ஆனால் ரணில் , சஜித் இணைவதில் ஒரு விபரீதமும் நடக்க வாய்ப்புள்ளது. அது மீண்டும் ராஜபக்ச தரப்பை ஆட்சி பீடம் ஏற்ற வழி செய்தும் விடலாம். இந்த ஆபத்து இப்போதே தெரிகிறது.
சஜித், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருக்க விரும்புவதாகவே தெரிகிறது. அப்படி இருந்தால்தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என நினைக்கிறார்.
அந்த பார்வையில் இருக்கும் எண்ணம் மிக சரியானது. ஆனால் கட்சிக்குள் இரு கருத்துகள் வெளிப்படையாகவே தெரிகிறது.
சிலர் ரணிலோடு இணைந்து பதவிகளை பெற விரும்புகிறார்கள். சிலர் அச்சத்தோடு பின் வாங்குகிறார்கள். ரணில் பலமானவராக இப்போது இருக்கலாம். ஆனால் அவரது கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாத கட்சி.
ரணில் , ராஜபக்ச கட்சியினரது ஆதரவில்தான் ஆட்சி செய்கிறார். அவர்களும் ரணிலை வைத்துக் கொண்டு , தங்களை பலப்படுத்திக் கொள்ளவே காய்களை நகர்த்துகிறார்கள். அவர்கள் கடும் பின்னடைவில் உள்ளார்கள்.
சஜித் பிரதமரானால் , மொட்டிலிருந்து பசில் அல்லது நாமல் எதிர்க்கட்சி தலைவராக இலகுவாக ஆகிவிடுவார்கள்.
இப்போதைக்கு ராஜபக்ச குடும்பத்தில் எவருக்குமே ஒரு நல்ல பதவி இல்லை.மகிந்தவை பிரதமராக்க எடுத்த முயற்சிகள் கூட தோற்று போய்விட்டன. அதேநேரம் ரணிலோடு சேர்ந்து சஜித் செய்தது என்ன? என கதை மாறவும் இடமுண்டு.
அடுத்த தேர்தலில் சஜித் கட்சி பெரும்பான்மையை பெற்றால் JVP இலகுவாக எதிர்க்கட்சியாகிவிடும். சஜித்துக்கு அடுத்து அதிக ஆதரவு உள்ள கட்சி JVPதான்.
JVP எதிர்க்கட்சியானால் நிச்சயம் அதற்கு பின் வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும் பலத்தை பெறும் சாத்தியம் அவர்களுக்கே அதிகம்.
JVP ஆட்சியமைப்பதை ஏனைய அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. காரணம் அவர்களை தோற்கடிக்கும் சக்தி இதுவரை ஆண்ட அல்லது ஆளும் எவருக்கும் வரப்போவதில்லை.
இதுவே ஏனையோரிடம் உள்ள இன்றைய அச்சம்.முதலாளித்துவ நாடுகளுக்கு உள்ள அச்சமும் அதுதான். JVPக்கு உதவிகளை செய்வது சீனாதான் என எல்லோருக்கும் தெரிகிறது.
எனவே இந்தியா மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் இதில் மிக அவதானமாக இருக்கும். IMF உதவிகளுக்கு சீனா முட்டுக்கட்டையாக இருந்த போதும் இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்த நாடுகள் செய்வது சீன ஆதிக்கம் இலங்கைக்குள் உருவாகாமல் தடுக்கவேதான்.
இதற்காக ரணில் சஜித் இணைய ராஜபக்சவினருக்கு மீண்டும் அரியணை ஏற வழி செய்துவிடலாம்.
எதிர்க்கட்சி தலைமை என்பது பிரதமருக்கு நிகரான ஒரு பதவி. இன்னொரு பள்ளத்தை தாண்ட வேண்டிய நேரம் இது.இதுவும் ஒரு திசை மாற்றமோ? என முகநூலில் ஜீவன் பிரசாத் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.