இந்த உணவுகளை எல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் உடலுக்கு ஆபத்தா?
நம் உடலுக்கு வீட்டு சாப்பாடு தான் மிகவும் நல்லது என எல்லோருக்கும் தெரியும், ஆனால் நாம் வீட்டில் ஒரு வேளையில் சமைக்கும் உணவுகள் ஒரே வேளையில் முற்றிலும் காலியாவதில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிஞ்சிய உணவுகளை பலரும் வீட்டு குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து, மறுநாளோ அல்லது 2-3 நாட்கள் வைத்தோ சூடேற்றி சாப்பிடுவது தான தற்போதைய பழக்கமாக மாறி வருகின்றது
ஆனால் அப்படி குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து, சூடேற்றி சாப்பிடுவது என்பது நல்லதல்ல என உங்களுக்கு தெரியுமா?
அதுவும் குறிப்பிட்ட சில உணவுகளை சமைத்த பின், அவற்றை உடனே சாப்பிட்டுவிடுவது தான் நல்லது. அதைவிட்டு, அந்த உணவுகளை எடுத்து வைத்து மறுநாள் அல்லது 2-3 நாட்கள் கழித்து சூடேற்றி உட்கொண்டால், பின் அது உடலுக்கு கேடு விளைவித்து, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இப்போது எந்த மாதிரியான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள்
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளைகுளிர்சாதன பெட்டியில் வைத்து உட்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நுண்கிருமிகளுக்கு புரோட்டீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். எனவே இறைச்சிகள், மீன், பால், சீஸ், முட்டை போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குளிர்ச்சியான நிலையில் உள்ள இறைச்சிகளில் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் செழித்து வளரும். எனவே குளிர்சாதன பெட்டியில் இறைச்சிகளை வைக்கும் போது, அவற்றை முறையாக சேமித்து வைக்க வேண்டும். இதனால் மற்ற உணவுகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். முடிந்தவரை புரோட்டீன் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலம் வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
மீந்து போன உணவுகள்
சமைத்து மீந்து போன உணவுகளை குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து சாப்பிடுவது என்பது நல்லதல்ல. சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலம் வைத்திருக்கும் போது, அதன் மேல் பூஞ்சை, பாக்டீரியா போன்றவை வளரத் தொடங்கிவிடும். எனவே சமைத்த உணவுகளை 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
கீரைகள் மற்றும் வெட்டப்பட்ட பழங்கள்
குளிர்சாதன பெட்டியில் ஒருசில பழங்கள், காய்கறிகளை மட்டும் தான் வைத்து சாப்பிட வேண்டும். ஆனால் கீரைகள், வெட்டப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கீரைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். அதேப் போல் நறுக்கிய காய்கறிகள் பழங்களை சரியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, கிருமிகள் அதில் வளரும் அபாயம் உள்ளன. இதன் விளைவாக இப்படிப்பட்ட காய்கறி, பழங்களை உட்கொள்ளும் போது, அதன் விளைவாக ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளன.
சாதம் மற்றும் சமைத்த பாஸ்தா
தற்போது பெரும்பாலான வீடுகளில் மீந்து போன சாதத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்த வேளை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் இதை பாதுகாப்பானதாகவும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சாதம் மற்றும் சமைத்த பாஸ்தாவை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, அதில் பேசிலஸ் செரியஸைக் கொண்டிருக்கலாம். இந்த பாக்டீரியாவானது வெப்பத்தை எதிர்க்கும் நச்சுக்களை உருவாக்கும். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைத்த சாதத்தை சூடேற்றி உட்கொள்ளும் போது, அதன் விளைவாக ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மீன்
மீன்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதல்ல. ஏனெனில் மீன்கள் வேகமாக அழுகக்கூடியவை மற்றும் கடுமையான உணவு மூலம் பரவும் நோய் அபாயத்தை ஏற்படுத்தும். அதுவும் சரியான முறையில் மற்றும் சரியான வெப்பநிலையில் சேமிக்கப்படாவிட்டால், அது ஹிஸ்டமைன் பாய்சன் ஏற்பட வழிவகுக்கும். எனவே முடிந்தவரை மீன்களை வாங்கியதும் உடனே சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.