இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஹரினி அமரசூரிய இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் 3ஆவது பெண் ஆவார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவினால் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இன்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது.
அதற்கமைய, புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கு முன்னதாக உலகின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளனர்.
அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் விஜித ஹேரத், லக்ஸ்மன் நிபுண ஆரச்சி உள்ளிட்ட மொத்தமாக 4 பேரிடையே அமைச்சுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.