சஜித் தரப்புக்கு கோரிக்கை விடுத்த ஹரின் பெர்னாண்டோ!
இலங்கையின் நலனுக்காக உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இன்றைய தினம் (10-08-2022) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால தீர்வை உருவாக்குவதற்கான ஒரே வழி இதுதான் என்றார்.
“ஐக்கிய மக்கள் சக்தி எங்களுடன் இணைந்து, மக்களின் அபிலாஷைகளுக்கு, குறிப்பாக இலங்கையின் இளைய தலைமுறையினருக்கு உயிர் கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு கட்சி இணங்க வேண்டுமென பணிவுடன் வலியுறுத்தினார்.
எந்தவொரு அரசியல் கட்சியையும் உடைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறிய அமைச்சர், தாம் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற போதிலும் தமது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
எஸ்.ஜே.பி.யுடன் இணைந்து கொள்ளத் தவறினால், யார் அல்லது எந்தக் கட்சி முன்வந்தாலும் அரசாங்கம் தொடர வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்தார்.