கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன ; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி
திரிபுராவுக்கு எதிரான போட்டியில் ரஞ்சி டிராபியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன?
கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி விட்டு, அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, விமானத்தில் ஏறியவுடன் அவரது உடல்நிலை மோசமடைந்தது. வாய் மற்றும் தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் தண்ணீர் என்று தவறாக நினைத்து அமிலம் போன்ற பொருளை குடித்ததாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது இயல்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நடந்தது என்ன?
அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரரும், கர்நாடகா கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மயங்க் அகர்வால் திங்களன்று ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பியபோது, தாகம் எடுத்தது.
அவர் தண்ணீர் என்று நினைத்து குடித்தது, தண்ணீரல்ல, அமிலம் போன்ற திரவம் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மயங்க் அகர்வாலின் செயலர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விமானத்தில் வாந்தி எடுத்த மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால் பயணித்த இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், 'அகர்தலாவிலிருந்து டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ விமானம் எண் 6E 5177, அவசர மருத்துவ நிலைமை காரணமாக, கிளம்பிய இடத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது.
பயணி வெளியேற்றப்பட்டு மேலதிக மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விமானம் மீண்டும் மாலை 4.20 மணிக்கு தனது இலக்கை நோக்கி புறப்பட்டது.
மயங்க் உடல்நிலை
அப்டேட் திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் செயல் செயலாளர் வாசுதேவ் சக்ரவர்த்தி மயங்க் உடல்நிலை தொடர்பான தகவல்களைத் தெரிவித்தார். 'மயங்க் அகர்வால் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எனக்கு அழைப்பு வந்தது.
மயங்க் ஒரு பாட்டிலில் இருந்த அமிலத்தைத் தண்ணீர் என்று தவறாக நினைத்துக் குடித்துவிட்டார். குடித்ததுமே அது தண்ணீர் இல்லை என்று தெரிந்துவிட்டது. வாயில் எரிச்சலும் புண்ணும் ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அவரது முகம் வீங்கிவிட்டது, அவரால் பேசமுடியவில்லை’.
பொலிசார் விசாரணை
மயங்க் மதியம் 2:30 மணிக்கு அகர்தலாவிலிருந்து கிளம்பும் இண்டிகோ விமானத்தில் பயணிப்பதற்காக, விமானத்தில் ஏறினார், அப்போது அவருக்கு தொண்டை கரகரத்தது. தனது இருக்கைக்கு முன் இருந்த பாட்டிலில் தண்ணீர் இருப்பதாக நினைத்து எடுத்து குடித்துவிட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதும், மயங்க் விமானத்தில் இருந்து இறக்கி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்போது ஆபத்தில்லை
32 வயதான மயங்க் இந்தியாவுக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். திங்கள்கிழமை திரிபுராவுக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணியின் கேப்டன் மயங்க், தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கேஎஸ்சிஏ) அதிகாரி ஒருவர் கூறுகையில், மாயங்கிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மயங்க் தற்போது அகர்தலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு அவரை மீண்டும் பெங்களூருக்கு அழைத்துச் செல்வோம் என்று அதிகாரி தெரிவித்தார்.
2020ல் இறுதி சர்வதேச போட்டி
மயங்க் அகர்வால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 5 பிப்ரவரி 2020 அன்று நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியில் அவர் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார்.
மயங்க் இதுவரை இந்திய அணிக்காக 21 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 1488 ரன்களைச் சேர்த்தார். ஒருநாள் போட்டியில் மயங்க் 86 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.