இன்று அனுமன் ஜெயந்தி ; மருதனார்மடம் ஆஞ்சநேயர் இரதோற்சவப் பெருவிழா
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது.
மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சனேயர் அருளை பெற குவிந்த பக்தர்கள்
அன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். சில வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதும் உண்டு. ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம்.

ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக, பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள், அனுமன். இவர் அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், ராம தூதன், சிரஞ்சீவி, மாருதி, ஆஞ்சநேயர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இவர் சிவபெருமானின் ருத்ர அம்சமாக கருதப்படுகிறார். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.

இந்நிலையில் அனுமன் ஜெயந்தி தினமான இன்று மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேயரின் அருளை பெற்றனர்.
