வரலாற்றுச் சாதனை படைத்த ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம்
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தனது வாகன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளில் ஒட்டுமொத்தமாக ஐந்து மில்லியன் (50 இலட்சம்) வாகனங்களைக் கையாண்டு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், வாகனங்களைக் கையாள்வதற்கான பிரத்தியேக இறங்குதுறை மற்றும் புதிய வாகனத் தரிப்பிடம் உள்ளிட்ட மேலதிக உட்கட்டமைப்பு முதலீடுகளை முன்னெடுக்கவுள்ளதாகத் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாதனை
2017 டிசம்பரில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போது வருடாந்தம் சுமார் ஒரு இலட்சம் வாகனங்களைக் கையாண்ட இத்துறைமுகம், 2025 ஆம் ஆண்டில் 726,153 வாகனங்களையும், 2026 ஜூலை மாதத்தில் மாத்திரம் 104,620 வாகனங்களையும் கையாண்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கு (Wilson Qu) கருத்துத் தெரிவிக்கையில்: "ஐந்து மில்லியன் வாகனங்கள் என்ற இலக்கை எட்டியமை, கப்பல் நிறுவனங்கள் எமது துறைமுகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், எமது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் பங்காளிகளின் பலத்தையும் பிரதிபலிக்கிறது.
இது எமது அனைத்து அணியினரதும் பங்குதாரர்களதும் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப உட்கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொள்வதே எமது முன்னுரிமையாகும்.
திட்டமிடப்பட்டுள்ள புதிய இறங்குதுறை மற்றும் வாகனத் தரிப்பிடம் என்பன பிராந்திய வாகன விநியோக மையமாக ஹம்பாந்தோட்டையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.