ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு
ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்கள ஊழியர்களின் துரிதப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூங்கா நிலப்பரப்பில் அபாயகரமான அறிகுறிகள் தென்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பது, அபாய எச்சரிக்கை பலகைகள் மூலம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளங்களைக் கொண்ட பகுதி மற்றும் வனப்பகுதியை நோக்கிய நுழைவு வீதி என்பன இவ்வாறு அபாயகரமான இடங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
அதேவேளை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தாவரவியல் பூங்கா ஊழியர்களால் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய 'டித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலையினால் மூடப்பட்டிருந்த ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, கடந்த 12 ஆம் திகதி சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.