தீவிரமாகும் சிஐடியினரின் வலைவீச்சு ; பிள்ளையானின் கீழ் செயற்பட்ட துப்பாக்கிதாரிகள் விரைவில் கைது
பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
பிள்ளையானின் ஆயுதக் குழு
இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.