கொழும்பில் குப்பை மேட்டில் இருந்து துப்பாக்கி மீட்பு
கொழும்பு - மாதம்பிட்டி குப்பை மேட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
களனி காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எவரேனும் ஒருவர் இந்த துப்பாக்கியைக் கொண்டு வந்து குப்பை மேட்டில் வீசிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கிராண்ட்பாஸ் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கித்சிறி குமாரவின் பணிப்புரைக்கமைய, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.